search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது"

    டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கிலும், நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறை யான்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவம் நடை பெற்று வருகின்றன.

    கடந்த சிலநாட்களுக்கு முன்பு கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ் மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசினர். அதுபோல் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்து மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன் குப்பம் சந்தைதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட் ரோல்குண்டு வீசினர். இதில் கடையில் இருந்த ஊழியர் கண்ணன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் நேற்று மாலை திடீரென்று கடலூர் வந்தார்.

    அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று ஐ.ஜி.ஸ்ரீதர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அதன்பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்த கம்மியம் பேட்டை, பணிக்கன்குப்பம் டாஸ்மாக்கடைகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட அரசு பஸ் சையும் ஐ.ஜி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து பணிக்கன் குப்பம் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    நேற்று இரவு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரங்கநாதன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×